சேலம்: மாமாங்கலத்தை அடுத்த டால்மியா போர்டு பகுதியில் வெள்ளைக்கல் சுரங்கம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசால் மூடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த வெள்ளைக்கல் சுரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தினக்கூலிக்கு ஆட்கள் அமர்த்தி சமூக விரோதிகள் சிலர், இரவு பகல் பாராமல் வெள்ளைக்கல்லை வெட்டி எடுத்தும், அதை மூட்டைகளில் கட்டி வைத்தும் லாரிகளில் ஏற்றிச் சென்று ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாவுக்கல் அரைவை ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், இங்கிருந்து கடத்தப்படும் வெள்ளைக் கற்கள், மக்னீசியம் சல்பைடு என்ற உரம் தயாரிப்பதற்காகவும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் தயாரிப்பதற்காகவும், ஓமலூர் மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆலைகளுக்கும் மற்றும் கர்நாடகா, கேரள மாநில பகுதிகளில் உள்ள ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால், அரசுக்கு ஆண்டுக்குப் பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சட்ட விரோத வெள்ளைக்கல் கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்கள், தங்களுக்குள் கோஷ்டிகளாகப் பிரிந்து கொண்டு அவ்வப்போது டால்மியா போர்டு குடியிருப்பு பகுதியில் மோதிக் கொள்வதாகவும், அதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வாழும் சூழல் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், கடத்தல் சம்பவம் குறித்து சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் பலமுறை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களால் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. புகாரைப் பெற்றுக்கொண்டு காவல் துறையினர், ஒரு சில நாட்களுக்குக் கடத்தல் கும்பலைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் கடத்தல் கும்பல் தங்களது வெள்ளைக்கல் வெட்டி எடுக்கும் கடத்தல் செயலை கைவிடாமல் தொடர்ந்து கொண்டே உள்ளனர்.
இந்த நிலையில், இன்று டால்மியா போர்டு பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் வெள்ளைக்கல் சுரங்கப் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்குப் பல ஆயிரம் மூட்டைகளில் வெள்ளைக் கல் பதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வருவாய்த் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தகவலின் பெயரில் அங்கு வந்த சேலம் மேற்கு வட்டாட்சியர் அருள் பிரகாஷ் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும், மற்ற வருவாய் துறை அதிகாரிகளை வரவழைத்து, லாரிகள் மூலம் கடத்தலுக்கு தயாராக இருந்த வெள்ளை கற்களை பறிமுதல் செய்து டான் மேக் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார். ஒவ்வொரு லாரியிலும் சுமார் 20 டன் அளவுக்கு வெள்ளை கற்கள் ஏற்றப்பட்டு மொத்தமாக எடை கணக்கீடு செய்யப்பட்டு பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், இப்பகுதியில் வெள்ளைக் கற்அள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதை தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சேலம் மேற்கு தாசில்தார் உறுதியளித்தார். மேலும், வெள்ளைக் கல் கடத்தலை தடுக்க 24 மணி நேரமும் சூரமங்கலம் போலீசார் ரோந்துப் பணியில், டால்மியா போர்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 5 மாநகராட்சிகள்.. அமைச்சர் கே.என்.நேரு கூறியது என்ன?