ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 8ஆம் தேதி முதல் உணவு விடுதிகள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, உணவுப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பில் விலக்கு அளிக்க வேண்டும் என்று சேலம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..
இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பழனிச்சாமி,” கரோனா வைரஸ் நோய் தொற்றை ஒழிப்பதில் ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் முழு ஒத்துழைப்பை அரசுக்கு வழங்கி, வாடிக்கையாளர்கள் நலன் காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.
சேலத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வரும் எட்டாம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கும் பணி தொடங்கப்படவுள்ளது. இதற்கு அனுமதி அளித்த தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் .
அதே நேரத்தில் ஹோட்டல் தொழிலாளர்கள் இரண்டு மாதங்களாக வேலை இல்லாமல் இருப்பதால் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். எனவே அவர்களுக்கு அரசு உதவிட வேண்டும் .
தற்போது உணவுப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இருப்பினும் அந்த விலை உயர்வை காரணம் காட்டி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உணவு வகைகளின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை. அதே நேரத்தில் உணவு வகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்றார்.