நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மணப்பள்ளியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் சுகாதாரத்துறை ஆய்வாளராக பயிற்சி எடுத்து வந்தார். அவர், நேற்று (நவம்பர் 14) இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு தேவராஜ் அழைத்துச் செல்லப்பட்டார். கணியூர் சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கையில், முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட சுகாதார ஆய்வாளர் தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர், தேவராஜூடன் சென்ற மூவர் சிறு காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.