சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், அண்ணா பூங்கா அருகே உள்ள அரசு மாணவியர் தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். விடுதியிலிருந்து கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதிக்கு அருகே உள்ள அண்ணா பூங்கா பேருந்து நிறுத்தத்தில் அரசுப்பேருந்துகள் நிற்காமல் செல்வதால், நீண்ட தூரம் நடந்து சென்று அரசுப்பொது மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நின்று, அங்கிருந்து பேருந்தில் செல்வதாகத் தெரிகிறது. இதனால் மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பேருந்துகள் நிற்காமல் செல்வது தொடர்கதையாகி வந்த நிலையில், இன்று(நவ.21) அரசுக் கல்லூரி மாணவிகள் திடீரென ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் தங்களை பேருந்தில் பயணம் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி, பாதி வழியில் இறக்கிவிடுவதாகவும், ஏனென்று கேள்வி கேட்டால் சைகைகள் மூலம், கேலி செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், "நாங்கள் தினமும் காலை அண்ணா பூங்கா பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி செல்ல பேருந்துக்காக காத்திருப்போம். அப்போது அந்த வழியே வரும் அரசுப்பேருந்துகளை ஓட்டுநர்கள் நிறுத்தாமல் செல்கின்றனர்.
இதனால் பல கிலோமீட்டர் சுற்றி வந்து, அரசு பொது மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நின்று, அரசுப் பேருந்தில் ஏறும் நிலை உள்ளது. அப்படி ஏறினாலும் எங்களை மிரட்டி கீழே இறங்கும்படி, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். ஏன் என்று கேட்டால் சைகைகள் மூலம் கேலி செய்கிறார்கள்.
அதேபோல மாலை கல்லூரி முடிந்து விடுதிக்குத் திரும்பும்போது, கலைக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் எந்த அரசு பேருந்தும் நிற்காததால், பல கிலோமீட்டர் நடந்து சென்று கோரிமேடு பகுதியில் அரசுப்பேருந்தில் ஏறுவோம். அப்போதும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் எங்களை கீழே இறங்கச்சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதனால் சரியான நேரத்திற்கு கல்லூரி சென்று படிக்க இயலாத சூழல் ஏற்படுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட சவுக்கு சங்கர்