சேலம்: விரைவில் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் (Erode East Election 2023) மக்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே.வாசன், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை சேலத்தில் இன்று (ஜன.29) சந்தித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் கூறுகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டதாகவும், அவ்வாறு ஏமாந்த மனநிலையில் உள்ள மக்கள் நாளுக்குநாள் நொடிக்குநொடி திமுகவுக்கு எதிராக வாக்களிக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாகவும், தங்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு எதிராக வாக்களித்து மக்கள் சரியான பாடம் புகட்ட உள்ளதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளதை கட்டுப்படுத்துவதோடு, அவற்றை முழுமையாக தடை செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும்; ஆனால், அதை சரிவர தமிழ்நாடு அரசு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அக்கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவர் யுவராஜா, மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநிலத் தேர்தல் குழு உறுப்பினர் ராஜேஷ்வரன், ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ரகு நந்தகுமார், மாணவர் மாவட்ட தலைவர் உலகநம்பி, புறநகர் மாவட்ட தலைவர் செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: Erode East Bypoll: தேர்தல் பணி குறித்து தீவிர ஆலோசனையில் திமுக அமைச்சர்கள்