தமிழ்நாட்டில் இந்துக்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றாக விளங்குவது விநாயகர் சதுர்த்தி. அப்போது, வித விதமான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு நாடு முழுவதும் பரவி வரும் கரோனா தொற்று காரணமாக பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாக்களுக்கு தமிழ்நாடு அரசானது தடைவிதித்துள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான சுற்றுலாத்தளம், புண்ணியஸ்தலம், திருமணங்கள் என பலவற்றுக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, வரும் 22ஆம் தேதி அன்று கொண்டாடப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை செய்யும் தொழிலாளர்கள் இந்த கரோனா பாதிப்பினால் சிலை செய்வதை கைவிட்டனர். இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை மற்றும் பொருளாதாரத்தை இழந்ததால் மிகுந்த சிரமத்தில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்து நாயக்கன் பட்டி பகுதியில் பரம்பரை பரம்பரையாக விநாயகர் சிலைகள் செய்யும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்யும் சிலைகளை இந்தாண்டு கரோனா பரவலின் காரணமாக செய்யவில்லை. மேலும் கடந்த 5 மாதம் முதல் தற்போதுவரை கரோனா தடைக்காலமானது நீட்டிக்கப்பட்டு வருவதால் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் மிகவும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இது குறித்து விநாயகர் சிலை தயாரிப்பாளர் ஹரிஹரன் கூறுகையில், "இந்துக்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். அதற்காக விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கிவிடுவோம். முத்துநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் தொழிற்கூடத்தில் ஆயிரக்கணக்கான சிறியதும் பெரியதுமான விநாயகர் சிலைகள் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரித்து விற்பனை செய்வோம்.
ஆனால் இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்திக்காக இது வரை எந்தவொரு சிலையும் செய்யவில்லை. இதனால் இந்த தொழிலை நம்பியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கச்சாப்பொருள் விற்பனையாளர்கள் கடும் பொருளாதார பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இதனால் ஏற்கனவே இருக்கும் விநாயகர் சிலைகளை விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்குவதோடு, தகுந்த இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளுடன், விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதியும், விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை காப்பாற்றிட முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 80% உயிரற்ற நிலையில் கிடந்த யானைக் குட்டியை காப்பாற்றிய மருத்துவர் - யார் இந்த யானை டாக்டர்?