சேலம்: சேலம் மாவட்டம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழா பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பெற்றோர்கள் நூற்றுக்கணக்கான கலந்து கொண்டனர். இதில் தமிழகக் காவல்துறையின் முன்னாள் தலைவரும், பணி ஓய்வு பெற்ற காவல் அதிகாரியுமான சைலேந்திரபாபு கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவின் சிறப்பு உரை நிகழ்த்தினார்.
7% பேர் மட்டுமே பட்டதாரிகள்: அப்போது அவர் பேசுகையில், “பட்டதாரிகள் தங்கள் பெற்றோருக்கு என்றைக்கும் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். பெற்றோருக்கு இணையாக யாரும் எந்தக் காலத்திலும் உதவி செய்திட முடியாது. இந்திய அளவில் ஒப்பிடும் போது பீகார் மாநிலத்தில் வெறும் 7 சதவீதம் பேர் மட்டுமே பட்டதாரிகளாகும் வாய்ப்பு கிடைக்கிறது. ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் கூட பட்டதாரிகள் அதிகம் இல்லை.
ஆனால், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் கல்லூரிக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரு நாட்டினை அழிக்க அணுக்குண்டுகள் தேவையில்லை. அந்த நாட்டின் கல்வியின் தரத்தை அழித்து, சிந்திக்காத மனிதர்களை உருவாக்கினால் போதும். எதிரிகள் கூட யாருமின்றி, அந்த நாடு தானே அழிந்து விடும். கல்வி அளிக்காவிட்டால் அவர்களுக்குள் சாதி, மதம், மொழி, இனம், பேதம் அதிகரித்து ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வர்.
கல்வியே ஆயுதம்: இளைஞர்கள் நாள்தோறும் செய்தித்தாள் வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் பெரிய அளவிலான தொடர் புத்தக வாசிப்பு நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். தமிழகத்தில் கடந்த ஓராண்டில் காவல் நிலையங்களில் பெண்கள் மட்டும் 10 லட்சம் புகார் மனுக்களை அளித்துள்ளனர். இதில் 75 ஆயிரம் மனுக்கள் பெண்களுக்கு எதிராக நடந்த கடுமையான குற்றங்கள் தொடர்பானவையாகும். இது போன்ற சமூகக் கொடுமைகளைக் களைய, கல்வி மிகப்பெரிய ஆயுதமாகும்.
மேலும், சாலை விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் தங்களது இன்னுயிரை இழக்கின்றனர். சாலை விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பதே பெரும்பான்மையான விபத்துகளுக்குக் காரணமாக இருக்கிறது. உயர்கல்வி பயின்ற இளைஞர்கள் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெறும் 13 கோடி மக்கள் மட்டுமே உள்ள ஜப்பான் நாடு, பல துறைகளில் முன்னேறுவதற்கு அவர்களின் கடுமையான உழைக்கும் திறனே காரணம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி; முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு உட்பட 18 ஆயிரம் பேர் பங்கேற்பு!