சேலம்: தமிழ்நாட்டில் வனப்பகுதிகளை 33 விழுக்காடாக அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் (forest minister ramachandran) கூறியுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராமச்சந்திரன் தலைமையில், வன அலுவலர்களுக்கான மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் வனப்பகுதிகளை 33 விழுக்காடாக அதிகரிக்க (TN govt will increase forest cover to 33 Percent) தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
விலங்குகள் பாதிப்பிற்கான இழப்பீடு
கடந்த ஆண்டு விலங்குகள் பாதிப்பால் இரண்டாயிரத்து 922 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதற்கான இழப்பீடு கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
வனப்பகுதிகளை அதிகரிக்கத் தனி வல்லுநர் குழு மூலம் மண் சார்ந்த மரங்களை வனப்பகுதிகள் தோறும் அதிகரிக்கச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும் வன விலங்குகளுக்குத் தேவையான உணவு முறைக்கு ஏற்ப தேவையான உணவுப் பயிர்கள் பயிரிடப்படும்.
குரும்பப்பட்டி வன விலங்கு பூங்கா
சேலம் மாவட்ட குரும்பப்பட்டி வன விலங்கு பூங்காவை பொதுமக்கள், குழந்தைகள் பொழுதுபோக்கு மையமாகப் பயன்படுத்தும் வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா பிரச்சினை காரணமாகச் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. தற்போது பிரச்சினை குறைந்த நிலையில் பணிகள் விரைவாகச் செயல்படுத்தப்படும்" என்று கூறினார்.