தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இனிப்புகள் தயாரிக்க முக்கிய பொருளான சர்க்கரை வெல்லம் ஆகிய பொருட்கள் தற்போது தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர், எடப்பாடி , காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு சில ஆலைகளில் வெள்ளத்தின் கலர் பளிச்சென தெரிவதற்காக சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சர்க்கரை மைதா சூப்பர் பாஸ்பேட் கலந்தும் வெல்லம் தயாரிக்கப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது.
இதனையடுத்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தனது அலுவலர்களுடன் , ஓமலூர் அடுத்துள்ள காடையாம்பட்டி அருகே உள்ள வடுகபட்டி பகுதிக்கு சென்று வெல்லம் தயாரிக்கும் ஆலையில் அதிரடி சோதனை மேற்கொண்டார்.
அப்பொழுது 70 மூட்டைகளில் சுமார் 2 டன் அளவிலான கலப்பட வெல்லம், 500 கிலோ சர்க்கரை மற்றும் கலப்படத்திற்கு பயன்படுத்தப்பட்ட சூப்பர் பாஸ்பேட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, ஆலை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் இதுபோல கலப்படத்தில் ஈடுபடும் ஆலை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் எச்சரிக்கை விடுத்தார்