சேலம் அரசு தலைமை பொதுமருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், மாநில அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மனுக்கு நினைவேந்தல் கூட்டமும், சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பின்னர் மாநில அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "மருத்துவர்கள், ஏழை மக்களின் நலன்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைத்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் தற்போது மறைந்துவிட்டார்.
இருந்தாலும் அவரது நினைவைப் போற்றும்வகையில் ஏழை மக்களின் மருத்துவ நலன்களுக்காக அரசு மருத்துவர்கள் எப்போதும் பாடுபடுவோம். அவருக்காக எங்களின் நினைவஞ்சலியை என்றும் செலுத்துகிறோம்" என்றார்.
மேலும் அவர் பேசுகையில்," அரசு மருத்துவர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால் அவரின் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக வழங்கக்கூடிய இழப்பீட்டுத் தொகையை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி மருத்துவர்கள் லட்சுமி நரசிம்மன் நினைவு கார்ப்பஸ் பண்ட் என்ற பெயரில் வழங்க வேண்டும்.
அரசு மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கையான காலமுறை ஊதியம், பதவி உயர்வு, அரசு சேவை மருத்துவர்களுக்கு முதுநிலை பட்ட மேற்படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை அதிகரிக்கச்செய்யும் அரசாணை மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை சுகாதாரத் துறை மீதான மானியக் கோரிக்கையின்போது தமிழ்நாடு அரசு வெளியிட முன்வர வேண்டும்.
மருத்துவர்கள் ஏழை மக்களின் நலன்களுக்காகத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுத்து, முதலமைச்சரின் அறிவிப்பை ஏற்று, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 118 அரசு மருத்துவர்களை 500 கிலோமீட்டருக்கு அப்பால் பணியிடமாற்றம் செய்யப்பட்டு 17b குற்ற குறிப்பாணை விதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.
இந்த இடமாற்றத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்துசெய்திட வேண்டும். மருத்துவர்களின் போராளி லட்சுமி நரசிம்மன் நினைவைப் போற்றும்வகையில், அவருடைய குடும்பத்தைத் தாங்கிப்பிடித்து, அவருடைய கனவுகளை முன்னெடுத்துச் செல்ல அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் நல நிதி திரட்டப்படும் என்று மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மருத்துவர் பாபு, பெருமாள் பிள்ளை உள்ளிட்ட ஏராளமான அரசு மருத்துவர்கள் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:தடம்புரண்ட பேருந்து: விபத்தில் சிக்கி மூவர் உயிரிழப்பு