சேலம் மாவட்டம் நெத்திமேடு அருகே இட்டேரி ரோடு பகுதியில் அன்பழகன் என்பவருக்கு சொந்தமான மரவள்ளிக் கிழங்கு மாவு ஆலை உள்ளது. இங்கு கிழங்கு திப்பியிலிருந்து மாட்டு தீவனம், கோழி தீவனம், பசை ஆகியவை தயாரித்து மற்ற மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று (செப்.30) காலை திப்பி மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீ பிடித்துள்ளது. பின்னர் தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் உள்ள மூட்டைகள் பற்றி எரிந்தது.
இதுகுறித்து குடோன் மேலாளர் ஹரிபிரசாத் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனிடையே தீயானது குடோனுக்கு அருகே இருந்த அரசுக்கு சொந்தமான சேகோ சர்வ் குடோனிலும் பரவியது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.
இருப்பினும் மரவள்ளிக் கிழங்கு மாவு ஆலையில் வைக்கப்பட்டிருந்த 300 ஜவ்வரிசி மூட்டைகள் தீயில் கருகி சேதமடைந்தன. மேலும் தீ விபத்தில் அங்கிருந்த சுமார் 30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: ஐசிஎஃப் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!