சேலம், செரி ரோடு அரசு கலைக் கல்லூரிக்கு எதிரே இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. சேலத்தின் மையப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் என்பதால், இங்கு எப்போதும் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
இந்நிலையில், நேற்று (மார்ச்.21) மாலை, பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பிரிவில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவ,ர் இந்த பெட்ரோல் பங்கில் 300 ரூபாய் கொடுத்து தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார்.
பிறகு அந்தப் பெண் காவலர் தன் வாகனத்தை இயக்கி, பெட்ரோல் பங்கிற்கு வெளியே வந்து வாகனத்தில் உள்ள பெட்ரோல் மீட்டரில் அளவை சரிபார்த்துள்ளார். மீட்டரில் பெட்ரோல் இருப்பு அளவு மிகவும் குறைவாகக் காண்பித்ததால் அதிர்ச்சியடைந்த அவர், மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு வந்து, ”பெட்ரோல் நிரப்பிய ஊழியரிடம் பெட்ரோல் அளவு குறைவாக உள்ளது” என்று புகார் கூறியுள்ளார்.
அதற்கு அந்த ஊழியர் ”உங்கள் வாகனத்தில்தான் பிரச்சினை. நான் சரியாகதான் பெட்ரோல் நிரப்பினேன் என்று கூறி வாகனத்தை எடுத்துச் செல்லுங்கள்” என்று சத்தம் போட்டுள்ளார். தொடர்ந்து, ’காவலரிடமே ஏமாற்றுகிறாயா’ என்று கூறிய பெண் காவலர், வாகனத்தில் உள்ள பெட்ரோலை அளந்து பார்க்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதையடுத்து, ஊழியர் வாகனத்தில் இருந்த பெட்ரோல் முழுவதும் எடுத்து அளவீடு செய்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோல் அளவிற்கு குறைந்ததை பார்த்த பெண் காவலர் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன்பின் பெட்ரோல் பங்க் மேலாளர் வந்து சமாதானம் செய்து பெண் காவலரின் வாகனத்தில் பெட்ரோல் நிரப்பி அனுப்பி வைத்தார். சேலம் பெட்ரோல் நிலையங்களில் மோசடி நடைபெறுவதாக அவ்வப்போது பொதுமக்கள் புகார் கூறி வந்த நிலையில், பெண் காவலர் ஏமாற்றப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பெட்ரோல் பங்க்கில் தகராறில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்