சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தியும், நூறுநாள் வேலையை 250 நாளாக அதிகரித்து, தொழிலாளர்களுக்கு ரூ.600 தின ஊதியமாக வழங்க வலியுறுத்தியும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்தக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், தமிழ்நாடு விவசாய சங்கத்தினரின் மேற்கண்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 8ஆம் தேதி பொதுவேலைநிறுத்தமும் மறியல் போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம், ஓமலூர், சங்ககிரி, கருமந்துறை ஆகிய மையங்களில் சாலை மறியல் செய்வதெனவும் மாவட்டக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் ஏ.அரியாக்கவுண்டர் தலைமை வகித்தார். மேலும் மாநில துணைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டில்லிபாபு உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் துரோணாச்சாரியா நிறுவனம்!