மத்திய அரசு மின்சார திருத்த மசோதா 2020 என்ற புதிய திட்டத்தை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விவசாய சங்கம், தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், இலவச மின்சாரத் திட்டத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். சிறு குறு தொழில், வீடுகளுக்கு வழங்கப்பட்டுவந்த இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், "30 ஆண்டுகளாக சிறு குறு விவசாயிகள் இந்த இலவச மின்சாரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்துவருகின்றனர். ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் சிறு குறு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இலவச மின்சாரத் திட்டம் ரத்து செய்யும் பட்சத்தில் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
எனவே, தொடர்ந்து இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும். இதனை மாநில அரசு அறிவித்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தார்.