சென்னை கோயம்பேடு உள்ளிட்ட மாநிலத்தின் பிரதான காய்கறி அங்காடிகளில் வெங்காயம் விலை கடந்த ஒருவாரமாக பன்மடங்கு உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம் கிலோ 90 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும் விற்கப்படுவதால் பொதுமக்கள் வெங்காயத்தின் பயன்பாட்டை மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். திடீர் வெங்காய தட்டுப்பாட்டை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயத்தை விற்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கூட்டுறவு துறை சார்பில் இயங்கும் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 45க்கு விற்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. சென்னை உள்ளிட்ட பிரதான நகரங்களில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அந்தந்த பகுதி கடைகளில் குவிந்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் பண்ணை பசுமை காய்கறி கடைகள் இயங்கவில்லை என்பதால் குறைந்த விலைக்கு அரசு அறிவித்தபடி வெங்காயம் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்தம்பட்டி பகுதியில் இயங்கிவந்த பண்ணை பசுமை காய்கறி கடை மூடப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கூறுகையில், அஸ்தம்பட்டி ஐயன் திருமாளிகையில் இயங்கிய பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியை, வருமானம் மற்றும் பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாததால் அதனை மூடி விட்டோம். அந்த கடையை வேறு இடத்தில் திறப்பதற்கு இடம் பார்த்து வருகிறோம். மேலும் தற்போது வெங்காய விற்பனை செய்வதற்காக புதிய இடத்தை தேடி வருகிறோம். இடம் அமைந்ததும் பண்ணை பசுமை கடை திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:
குட்கா கண்டெய்னரை துரத்தி பிடித்த போலீசார்; சிக்கிய 5.5 டன் குட்கா பொருட்கள்!