சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த சார்வாய் புதூர் அருகே உள்ள மணிவிழுந்தான் பகுதியில், போலி மணல் தயாரித்து இரகசியமாக விற்பனை செய்து வருவதாக ஆத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து ஆத்தூர், தலைவாசல் காவல்துறையினர் ஆகியோர் தாசில்தார் அன்புச்செழியன் தலைமையில், மணிவிழுந்தான் பகுதியில் இயங்கி வந்த போலி மணல் தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, ஏரியில் இருந்து டன் கணக்கில், செம்மண்னை கடத்திக் கொண்டு வந்து சுத்திகரித்து அரைத்து, ஆற்று மணல் என்று கூறி லாரிகள் மூலம் கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் விற்பனை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
போலி மணல் தயாரித்து விற்ற ஐந்கு பேர் கைது அதனைத் தொடர்ந்து, அங்கு மணல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள், 60 டன் போலி மணல், ஏரி மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைத்தனர். போலி மணல் தயாரிப்பில் ஈடுபட்ட தமிழரசன், சதீஷ்குமார், ஷாஜகான், பிரபு, பிரபாகரன் ஆகிய ஐந்து பேர் மீது தமிழ்நாடு கனிமவளங்களை திருடுதல், மணல் கொள்ளை, சட்டவிரோதமாக ஆலை நிறுவியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் தலைவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் போலியாக மணல் தயாரித்து சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க... பட்டப்பகலில் மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்!