சேலம்: சென்னை போலீசாருக்கு சில தினங்களுக்கு முன் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றது போல போலியான ஆவணங்களை தயாரித்து ஊரக வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் தமிழ்நாட்டில் போலியான வங்கி ஒன்று செயல்பட்டு வருவதாக கிடைத்த புகாரின் பெயரில் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து வங்கியின் தலைவராக செயல்பட்ட சந்திர போஸ் என்பவரை சென்னை போலீசார் கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின் பேரில் தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்டங்களில் அவரது வங்கி செயல்பட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். விசாரணையில் இந்த வங்கிகளில் 3000 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
சேலத்தில் ஏவிஆர் ரவுண்டான அருகில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இந்த வங்கி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கோவையைச் சேர்ந்த மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பி முத்துக்குமார் மற்றும் போலீசார் நேற்று(நவ-9) சேலம் வங்கியில் திடீர் சோதனை நடத்தினர். அங்கிருந்த போலி வங்கியின் மேலாளர் விமல்ராஜ் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில் வங்கியில் இருந்து ஹார்ட் டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் இந்த போலி கூட்டுறவு வங்கியில் எவ்வளவு பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர் அவர்களிடம் இருந்து பண மோசடி எவ்வளவு நடைபெற்று உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு?