சேலத்தில் ஆண்டுதோறும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் போஸ் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அரசுப் பொருட்காட்சியும் சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் இந்த ஆண்டு பொருட்காட்சியை நடத்தலாமா... வேண்டாமா? என அரசு அலுவலர்கள் ஆலோசித்துவந்தனர்.
அதற்குக் காரணம், கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தற்பொழுது போஸ் மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பேருந்துகள் சென்றுவருகின்றன.
இந்த சூழ்நிலையில் அரசுப் பொருட்காட்சி, பள்ளப்பட்டி பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் காலியிடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனால் அந்த இடத்தில் உள்ள குப்பைக் கூளங்கள் அகற்றப்பட்டு பொருட்காட்சி அமைப்பதற்கு ஏதுவாக சமன்படுத்தப்பட்டு இரவு பகலாக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
மேலும் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு அனைத்துத் துறைகளின் சார்பில் அரங்குகள், பொதுமக்களுக்குத் தேவையான பொழுதுபோக்கு அரங்குகள், குழந்தைகள் மகிழும் வகையில் விளையாட்டுக் கருவிகளும்-ராட்டினங்களும் அமைக்கப்பட இருக்கின்றன.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் இந்தப் பொருட்காட்சி மொத்தம் 45 நாட்களுக்கு நடக்க இருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.