சேலம் மாவட்டத்தில் அரசுப் பொருட்காட்சியைத் திறந்து வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு வருகை தருவதாக இருந்தது. எனவே, எட்டு வழி சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலமைச்சரை சந்தித்து மனு அளிப்பதற்காக வந்திருந்தனர்.
இதனைக் கண்ட காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக வலியுறுத்தினர். இருப்பினும் முதலமைச்சரை சந்தித்து, தாங்கள் எட்டு வழி சாலைக்கு நிலம் கொடுக்கத் தயாராக இல்லை என்ற மனுவை அளித்துதான் செல்வோம் என்று உறுதியாக இருந்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், விழா நடைபெறும் பகுதிக்கு முதலமைச்சர் வந்தபோது, அவரைச் சந்திக்க மனுக்களோடு, விவசாயிகள் அவரை நோக்கிச் சென்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, விழா நடைபெறும் பகுதிக்கு செல்லக்கூடாது என்று கூறினர். இதனால் விவசாயிகள் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். சுமார், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விவசாயிகள் காத்திருந்தும் அனுமதி மறுக்கப்பட்டதால், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், காவல்துறை உயர் அலுவலர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.