சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே பாபு நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (70). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மாதம்மாள், பெருமாயி என்கிற இரண்டு மனைவிகள் உள்ளனர்.
இரண்டு மனைவிகள் இருந்தும் ஆறுமுகம் தனியாக வசித்து வந்துள்ளார். இவர், தினந்தோறும் மாலை வேலைகளில் மது அருந்திவிட்டு, தெருவில் அநாகரிகமாகப் பேசுவதும், அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, வழக்கம்போல நேற்று இரவு ஆறுமுகம் நன்றாக மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் முரளி என்பவரின் மனைவியை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த முரளியும், அவரது குடும்பத்தினர் மூன்று பேரும் சேர்ந்து ஆறுமுகத்தைக் கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
ஆறுமுகம் கொல்லப்பட்டதை அறிந்த அவரது இரண்டு மனைவிகளும், இன்று அதிகாலை சேலம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஆறுமுகத்தை தாக்கப் பயன்படுத்திய கட்டைகளைக் கைப்பற்றிய காவல் துறையினர் ஆறுமுகத்தைக் கொலை செய்த முரளி உட்பட நான்கு பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.