சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர் மற்றும் இடங்கணசாலை ஆகிய ஐந்து பேரூராட்சிகள், சேலம், வீரபாண்டி மற்றும் பனமரத்துப்பட்டி ஆகிய மூன்று ஒன்றியங்களைச் சேர்ந்த 778 ஊரக குடியிருப்புகளுக்கான புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அதனைத்தொடர்ந்து வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கல்பாரப்பட்டி ஊராட்சியில் இத்திட்ட பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணி ரூ.652 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை பூமி பூஜை செய்து திட்ட பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சங்ககிரி எம்எல்ஏ ராஜா, வீரபாண்டி ஓன்றிய குழு தலைவர் வரதராஜ், துணை தலைவர் வெங்கடேசன், பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், சேலம் ஒன்றிய குழு உறுப்பினர் மல்லிகா வையாபுரி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.