சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து காடையாம்பட்டி, ஓமலூர் பகுதிகளுக்கு காவிரிநீர் கொண்டு வருவதற்காக ராட்சதக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. மேட்டூர் அனல்மின் நிலையம் எதிரே பவானி செல்லும் சாலையில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. வெளியான தண்ணீர் சிறிது நேத்தில் சாலையில் இரண்டு அடி உயரத்திற்கு குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்நிலையில், பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு நீருந்து நிலைய மின் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு நீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.