சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகில் உள்ள சேரன் நகரை சேர்ந்தவர் சிறுவன் ஹரி விக்னேஷ். இவர் தனது தங்கையுடன் இன்று காலை தனது வீட்டில் இருந்து, அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது தெருவில் இருந்த நாய் ஒன்று ஹரி விக்னேஷின் தங்கையை கடிக்க வந்துள்ளது.
இதில் அதிர்ச்சி அடைந்த ஹரி விக்னேஷ் நாயை விரட்டியுள்ளார். இதனால் ஹரி விக்னேஷை அந்த நாய் பல்வேறு இடங்களில் கடித்து குதறியது. இதையடுத்து அந்த வழியே சென்றவர்கள் நாயை விரட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து சிறுவன் ஹரி விக்னேஷ் தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் நாயின் உரிமையாளர் பிரபாகரனிடம் விசாரித்துள்ளனர். ஆனால் பிரபாகரன் அவர்களுக்கு சரியாக பதிலளிக்காமல் அலட்சியமாக பேசியுள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நடந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பெயரில் நாயின் உரிமையாளர் பிரபாகரனை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போதும் அவர் தொடர்ந்து காவல் துறையினரிடமும் அலட்சியமாக பதிலளித்துள்ளார். இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து 15 நாள் கடுங்காவலில் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: உயிர்கொல்லும் வெறி நாய் கடியிலிருந்து மீட்க நடவடிக்கை எடுங்கள்!