சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 'காஷ்மீரில் 370, 35-A அரசியல் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியாவில் எங்கும் போராட்டம் நடைபெறவில்லை. அங்கெல்லாம் தேசப்பற்று அதிகமாக உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இந்த சட்டங்கள் என்ன சொல்கிறது என்றே தெரியாமல், இந்தியாவே காஷ்மீரை விட்டு வெளியேறு என்று கோஷம்போடும் தேசத் துரோகிகள் தமிழ்நாட்டில் இருப்பதுதான் துரதிர்ஷ்டவசமானது என்று விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் இலவச இணைப்புக் கட்சிகளான காங்கிரஸ், வைகோ, திருமாவளவன் போன்ற கட்சிகள், சமுக நீதியை காப்பதாக பேசுகின்றனர். இவர்கள் இல்லாவிட்டால் சமூகநீதி செத்து போய்விடும் என்றும், ராமானுஜரே, பெரியார் பிறந்ததற்கு பிறகுதான் பிறந்தார் என்று பேசக்கூடிய பகுத்தறிவாளர்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பட்டியலின, மலைவாழ் மக்களுக்கு இட ஒதுக்கீடே கிடையாது. ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசு 370, 35-ஏ ஆகிய அரசியல் சட்டப் பிரிவுகளை நீக்கம் செய்த பிறகு தற்போது இடஒதுக்கீடு கிடைக்கிறது. பிற்பட்ட மக்களுக்கு இரண்டு விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது தேசிய அளவில் இருக்கின்ற 27 விழுக்காடு இடஒதுக்கீடும் பிற்பட்ட மக்களுக்கு கிடைக்கிறது. இதை எதிர்க்கின்ற திமுக சமூக விரோத சக்தியா, இல்லையா? இதை எதிர்க்கிற வைகோ, திருமாவளவன் ஆகியோர் பிற்பட்ட சமுதாயத்தின் எதிரிகள்தானே என்று ஆக்ரோஷமாக தனது கருத்துகளை எடுத்துரைத்தார்.
மேலும், இந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவே நாடு முழுவதும் கூட்டங்கள் நடத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.