சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,' மத்திய அரசு 50 வகை காரணிகளை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து தமிழ்நாட்டிற்கு சிறந்த ஆளுமை அந்தஸ்தை வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி. இதற்கு உதவிய அரசு ஊழியார்கள், அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்குப்பதிவு மறைமுகமாகவே நடைபெற்றுள்ளது. யார் வெற்றி பெறவேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானித்துள்ளனர். இதில் பயப்படத் தேவையில்லை திமுக தலைவர் ஸ்டாலின் தேவையின்றி அச்சப்பட்டு நீதிமன்றத்தை நாடுகிறார். அதிமுகவைப் பொறுத்தவரையில் தேர்தல் நடைமுறையில் யாரும் தலையிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்து, ஆனால் ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் நாடகம் ஆடுகிறார்.
தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லாத அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பின்பற்றப்பட்ட வழிமுறைகளே தற்போதும் பின்பற்றப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இப்போது அமல் படுத்தப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் சீர்திருத்தமானது 2003 ஆம் ஆண்டு மத்திய பாஜக ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் 2010ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்தபோது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆட்சியில் அங்கம் வகித்தபோது மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த திமுக இப்பொழுது வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது தேசிய குடியுரிமை பதிவேடு கிடையாது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களை குழப்பி வருகிறார்கள். பொதுமக்களும், இளைஞர்களும், சிறுபான்மையினரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு புதிதாக 900 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வகையில் 9 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியை உள்ளதை கருத்தில் கொண்டு மின் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக விளைவைச் சந்திக்கும்!