தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்குமார் இன்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை டெல்லியில் சந்தித்தார். அப்போது அவர் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் தருமபுரி மக்களவைத் தொகுதியில் இந்தியாவின் மிக நீண்ட சாலையான என்.ஹெச் 44 கடந்து செல்கிறது. இச்சாலையில் காரிமங்கலம் - அகரம் கூட்ரோடு, குண்டலபட்டி - தருமபுரி சந்திப்பு ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க அப்பகுதியில் உடனடியாக மேம்பாலம் அமைக்க வேண்டும், மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்துவரும் தொப்பூர் மலைப்பாதையை முழுவதுமாக சீரமைத்து வளைவுகள் இல்லாமல் நேரான சாலையாக மாற்ற வேண்டும், மேலும் விபத்துக்களை தடுக்க பாளையம் புதூர் கூட் ரோடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும், கிருஷ்ணகிரி முதல் சேலம் வரை உள்ள தற்போதைய தேசிய நெடுஞ்சாலை எண் 44ஐ விரிவுபடுத்தி எட்டு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும், இயற்கை வளங்களை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலை நடுவே குறுவகை மரங்களை நடுவதற்கு தருமபுரி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் மரம் நடும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தார்.