திமுக சார்பாக சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் ராஜேந்திரன், மேற்கு தொகுதியில் போட்டியிடும் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன், தெற்கு தொகுதியில் போட்டியிடும் சரவணன், ஓமலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் ஆகியோருக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "காவேரி நீர் திட்டம், ஏற்காடு தாவரவியல் பூங்கா, ஆட்சியர் அலுவலகம், மேட்டூர் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி திட்டம், சேலம் - கிருஷ்ணகிரி நான்கு வழி சாலை, விமான சேவை, இவை அனைத்தும் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டவை.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி எப்படி வந்தார் என்பது தெரியும். அவர் படிப்படியாக வந்தாரா இல்லை ஊர்ந்து வந்தாரா என்பதும் தெரியும். திமுக செய்த சாதனைகளை பட்டியலிட்டது போல் முதலமைச்சர் பட்டியலிட தயாரா, சொந்த தொகுதியை ஏமாற்றும் மனிதர்தான் முதலமைச்சர்.
சமூகநீதி பேசும் அவருக்கு அது பற்றி தெரியுமா, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான், இது பற்றி தெரியாமல் எப்படி சமூகநீதி பேசுகிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் ஆளப்போவதில்லை, மாறாக பாஜகதான் ஆட்சி செலுத்தும், இதை தவிர்க்க திமுகவிற்கு வாக்களியுங்கள் " என்று தெரிவித்தார்.