சேலம்: சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், கோரணம்பட்டி, புதுப்பாளையம், சமுத்திரம், கோண சமுத்திரம், வெள்ளாளபுரம் ஆகிய இடங்களில், அக்கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடி ஏற்றி வைத்து அதன் பின் சிறப்புரையாற்றினார். அப்போது, ''கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் கொடுத்த 520 வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை, முதலமைச்சர் ஆகிய பின் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இன்று வரை எதையும் நிறைவேற்ற வில்லை.
அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றது. அங்கு சென்ற தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சரிடமும், நீர் பாசனத்துறை அமைச்சரிடமும் மகிழ்ச்சியுடன் போட்டோ மட்டும் எடுத்துக் கொள்கிறார். ஆனால், தமிழக மக்களின் வாழ்வாதாரமான காவிரி பற்றியோ, தண்ணீர் திறக்க வேண்டும் என்றோ கோரிக்கை வைக்கவில்லை.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை வருமா?.. வராதா? - எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!
அதே நேரத்தில், மத்திய அமைச்சருக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுங்கள் என்று கடிதம் எழுதுகிறார். ஆற்றில் தண்ணீர் திறந்து விடும் அதிகாரம் உள்ளது கர்நாடக அரசிடம். அங்கு முதலமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவரிடம் பேசாமல் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி மக்களை மு.க. ஸ்டாலின் ஏமாற்றுகிறார்.
அதுமட்டுமல்லாமல் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு அதிகம் ஆகியுள்ளது. இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் நிர்வாகத் திறமையற்ற அரசு நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. விலைவாசி எந்த மாநிலத்தில் குறைவாக உள்ளதோ அங்கு இருந்து இறக்குமதி செய்து கூட்டுறவு சங்கம் மூலமாக அரசு விற்பனை செய்ய வேண்டும்.
ஆனால், அரசாங்கம் அதைப் பற்றி எந்த கவலையும் படவில்லை. அவரது குடும்பத்திற்கு எவ்வாறு வருமானத்தை ஈட்ட வேண்டும் என்று தான் செயல்பட்டு வருகிறார்” என்று தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர்கள் முன்னிட்டு அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது