அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேமுதிக கூட்டணியில் சேலம் மேற்குத் தொகுதி வேட்பாளராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அழகாபுரம் மோகன்ராஜ் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 22) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்நிலையில் தேமுதிக சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "சேலம் தெற்குத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தேமுதிக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜுக்கு ஆதரவாகத் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
ஐந்து நாள்களுக்குள் சிகிச்சை முடிந்து அழகாபுரம் மோகன்ராஜ் தீவிர பரப்புரையில் ஈடுபடுவார். வருகின்ற 25ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தாதகாப்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அதனைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் சேலத்தில் பரப்புரையில் ஈடுபடுவார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடு - சத்யபிரத சாகு