சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் - மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அ.மருதமுத்து, ஆர்.எம்.சின்னதம்பி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ராமன்," தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்திவருகிறது. அத்தகைய திட்டங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் பணியாற்றி வருகின்றது.
இக்கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 11 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்வழக்குகளின் தன்மையறிந்து உரிய முடிவுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வழக்குகள் சார்ந்த கருத்துக்களை அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட காவல் துறை அதிகாரிகள் உரிய விளக்கத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் சட்ட பட்டதாரிகள் சொந்தமாக தொழில் துவங்க ஊக்குவிப்பு தொகையாக ஐந்து நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ. இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரும், மாவட்ட ஆட்சியருமான ராமன் வழங்கினார்.