சேலத்தில் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அந்த வகையில், இன்று சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணியை சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். அதற்கென பேருந்து நிலையத்தில் சானிடைசர் கலந்த தண்ணீரை வைத்துள்ளோம். அதனை ஓட்டுநரும் நடத்துநரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆட்சியர் ராமன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "கரோனா தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வரப்படுகிறது. முகக்கவசம், சானிடைசர், கிருமி நாசினி மருந்து ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பணை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: ’கரோனா வைரஸ் அறிகுறியுடன் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டாம்’ - தலைமைச் செயலர்