சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ இயக்குநர் நாராயண பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் ஆய்வு குறித்து கூறுகையில், "சேலம் அரசு மருத்துவமனை கரோனா பிரிவில் செவிலியர்கள், மருத்துவர்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். அதே நேரத்தில், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளதாக புகார் எழுந்தது.
இங்கு உடனடியாக செவிலியர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 100 செவிலியர்கள் நிரப்பப்படுவார்கள். மருத்துவமனையில் உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணியிடங்களும், தனியார் அமைப்புகள் முலம் அதிகப்படுத்தி கரோனா சிகிச்சை வழங்கும் பணி தீவிரமாக செயல்படுத்தப்படும்.
தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் பணியாற்ற விரும்பினால் அரசு மருத்துவமனையில், சேவை செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.
நோயாளிகளுக்கு காலம் தாழ்த்தாமல் சிகிச்சை அளிக்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சேலத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர்கள் இறப்பு விழுக்காடு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் டேங்க் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் அமைக்கப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள
தனியார் மருத்துவமனைகளில், கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகள், கடைசி நேரத்தில் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பக் கூடாது. இதுபற்றி சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படிப்படியாக பிளாஸ்மா சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.