தர்மபுரி: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் எப்போதும் பரபரப்பாக இயங்கி தொகுதி மக்களின் குறைகளை நேரடியாக சென்று கேட்டு பிரச்னையை தீர்த்துவைப்பவர்.
சமூக வலைதளம் மூலமாக மருத்துவ உதவி, கல்வி கட்டண உதவிகள் கேட்டு கோரிக்கை வைப்பவர்களுக்கு மாநிலம் கடந்து சென்று உதவி செய்தவர். இவர் கடந்த ஒரு மாதமாக எந்த ஒரு அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
கரோனா காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பொதுமக்களை சந்திக்க வரவில்லை என தர்மபுரி அதிமுகவினர் சமூக வலைதளங்களில் கருத்துப்பதிவிட்டு வந்தனர். தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு நேற்று சேலம் இரும்பு ஆலையில் நடைபெற்ற ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை கொண்ட கரோனா சிகிச்சை மையம் தொடக்கவிழாவில் கலந்து கொண்டார். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்பிக்கள் சின்னராஜ், எஸ்.ஆர். பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவர் ஒரு மாதமாக ஓய்வில் இருந்த போதும் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு உணவு பொருள்களை அனுப்பி வைத்தார். கரோனா நோயால் பாதிக்கப்படும் தருமபுரி மக்கள்களுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், சென்னை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.