மத்திய பாஜக அரசு 2019ஆம் ஆண்டுக்கான தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை தனியாருக்கு லாபம் ஈட்டும் வகையில் அரசு தயாரித்துள்ளதாகவும், தாய்மொழி வழிக் கல்விக்கு உத்தரவாதம் அளிக்காமல் இந்தியை திணிக்கும் விதமான கொள்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு இருந்துவருகிறது.
சமூகநீதிக்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீட்டை சீரழித்து தொழில் கல்வி என்ற பெயரில் குலக்கல்வி முறையை மீண்டும் அமல்படுத்த வழிவகை செய்கிறது. மாநில உரிமைகளிலிருந்து கல்வி பறிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன.
எனவே இந்த தேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜூலை 25 முதல் 31 வரை மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி அதை மத்திய அரசுக்கு அனுப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி இன்று சேலம் சந்திப்பு, சூரமங்கலம் உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் அக்கட்சியின் சேலம் மாநகர மேற்கு செயலாளர் எம். கனகராஜ் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அப்போது பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. இதை மாநிலக் குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் தொடங்கிவைத்தார். செயற்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. பாலகிருஷ்ணன் ஐ. ஞானசவுந்தரி, ஜி. கண்ணன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.