சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் நத்தக்கரை சோதனைச் சாவடி, ஆத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் ஆத்தூர் நகராட்சி கரோனா வைரஸ் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை சேலம் மாவட்ட கரோனா வைரஸ் நோய்த் தொற்று, தடுப்பு பணி சிறப்பு கண்காணிப்பு அலுவலர் முகமது நசிமுத்தீன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சோதனைச் சாவடியில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து உரிய வாகன அனுமதி பெற்று வருகை தரும் நபர்களை சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினரால் சோதனை, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதையும், வெளி மாவட்டங்களிலிருந்து இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வருகை தருபவர்கள் உரிய வாகன அனுமதி பெற்று வருகின்றனரா என்பது குறித்தும், ஆய்வு மேற்கொண்டார்.
சிகப்பு மண்டலங்களில் இருந்து வருகை தரும் அனைத்து நபர்களுக்கும் கரோனா நோய்த் தொற்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தும் முகாம்களில் கட்டாயமாக தனிமைப்படுத்தவும், உரிய வாகன அனுமதி இல்லாமல் வருகை தரும் நபர்கள் மீது காவல் துறை மூலம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
பின்னர், சேலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்ட முகமது நசிமுத்தீன், கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்ட நபர்கள் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறித்தும் மருத்துவர்கள், செவிலியர்களின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து சேலம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முகமது நசிமுத்தீன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைபடி சேலம் மாவட்டத்தில் கரேனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கை வசதிகளையும், சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் அனைத்து அலுவலர்களும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அலுவலர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் பணியாற்றிட வேண்டும். பொதுமக்களுக்கு தொடர்ந்து இந்நோயின் தன்மை குறித்தும் இந்நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.