கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலத்தில் முழு ஊரடங்கினால் சிறு கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறி கடைகள் என அனைத்து வகையான கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், சேலம் நெத்திமேடு பகுதியில் முழு ஊரடங்கை மீறி மளிகை கடைகள், பேன்சி ஸ்டோர்கள் என ஐந்துக்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டு அவற்றில் விற்பனை நடைபெற்றது.
இந்நிலையில், நெத்திமேடு பகுதியில் ரோந்து சென்ற காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது குறித்து விசாரணை நடத்தினர். பிறகு அனைத்து கடைகளுக்கும் சீல் வைத்தனர்.
இதேபோல் சேலம் குகை தாதகாப்பட்டி பகுதியில் தடையை மீறி காய்கறிகள் விற்பனை செய்துவந்த 2 நபர்களை காவல்துறையினர் கைதுசெய்து சுமார் ஒரு டன் அளவிலான காய்கறிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் கடை உரிமையாளர்களுக்கு காவல் துறையினர் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். இதுபோல மீண்டும் நடக்கும் பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: என்ன எல்லாரும் பின்னால போறாங்க... நூதன தண்டனையில் காவல் துறை!