கரோனோ பெருந்தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தன்னார்வலர்கள் மற்றும் அரசு சார்பில் மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பகின்றன .
அதுபோல சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்ச தாங்கி ஏரி பகுதியில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இன்று இஸ்லாமிய தன்னார்வ அமைப்பினர் அப்பகுதிக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி வந்தனர்.
இந்நிலையில் அரசாங்க விதிமுறையை மீறி மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தாமல் நிவாரணப் பொருள்களை வழங்கிவருவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் சென்றது. அதன் அடிப்படையில், அங்கு சென்ற அலுவலர்கள், நிவாரண பொருள்கள், வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தங்களுடைய நிவாரண பொருள்களை வழங்கவேண்டுமென காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
பொதுமக்களின் இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் காவல் துறையினர் அவர்கள் அனைவரையும் கலையும்படி எச்சரிக்கை விடுத்த பின்னரே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”அரசாங்கம் வழங்கிய 10 கிலோ அரிசி எங்களுக்கு போதவில்லை. இதனால்தான் பல்வேறு தன்னார்வலர்கள் எங்களுக்கு உதவி வருகின்றனர். இன்று இஸ்லாமியர்கள் சிலர், அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கி வந்தனர். இதனை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் பறிமுதல் செய்ததால் எங்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை வழங்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை” என்றனர்.
இதையும் படிங்க: ‘அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’ - ஸ்டாலின் காட்டம்