சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட எடப்பாடி நகராட்சி பகுதிகளில் வீடுகள்தோறும் சென்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் வழங்கினார்.
மேலும் கரோனோ வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை அவர் விளக்கமாக மக்களுக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகரன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் ராமன், “கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரிதமாக எடுக்கப்பட்டுவருகின்றன. கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கக்கூடிய இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
மேலும், குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவே உள்ள இறைச்சிக் கடைகள் புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எடப்பாடி பகுதியில் விற்பனையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அருகருகே கடைகள் அமைத்து பொருள்களை விற்பனை செய்துவருகின்றனர்.
அதுபோல செயல்படுபவர்கள் உரிய அலுவலர்கள் மூலம் கண்டறியப்பட்டு, அவர்களின் கடைகளுக்குச் சீல்வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...திருநெல்வேலியல் 22 பேருக்கு கரோனா - மேலப்பாளையம் அடைப்பு