சேலம் மாவட்டம், மணியனூர் பகுதியில் தமிழ்நாடு அளவில் பன்னிரண்டாவது அரசு சட்டக்கல்லூரி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அரசு சட்டக் கல்லூரியில் மூன்று மற்றும் ஐந்து ஆண்டு சட்டப்படிப்புகள் இந்தக் கல்வியாண்டு முதல் தொடங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற சட்டக்கல்லூரி தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கல்லூரியை முறைப்படி திறந்துவைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில், தருமபுரி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் சிவதாஸ், கோவை அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், சட்டக் கல்வி துறை செயலர், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தொடக்க விழாவில் முதலமைச்சர் பேசுகையில், "நாளடைவில் சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்குச் சட்ட கல்வி வழங்கும் நோக்கத்தோடு இக்கல்லூரியானது தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கல்லூரியானது, இந்திய அளவில் பெரிய பல்கழைக்கழகமான தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.