சேலம்: அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (25). இவர் சரக்கு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று (மார்ச் 12) இரவு, சரக்கு வாகனத்தில், கொண்டலாம்பட்டி ரவுண்டானா நோக்கி சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், இவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில், சந்தோஷ்குமார் குடிபோதையில் இருந்ததாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடன், பத்தாயிரம் ரூபாய் அபராதம் கேட்டுள்ளனர்.
தீக்குளித்த ஓட்டுநர்
இதனால், பறிமுதல் செய்த வாகனத்தை விட்டு செல்ல மனமில்லாத சந்தோஷ்குமார், அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் வாங்கி வந்து, காவலர்கள் கண் முன்னே, தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். தீ பற்றிய நிலையில் சந்தோஷ் குமார் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடியுள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸை வரவழைத்த காவல்துறையினர், சந்தோஷ் குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே சந்தோஷ்குமார் தீ வைத்துக் கொண்டு சாலையில் ஓடும் சிசிடிவி காட்சிகள், தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: வீடுகளை நோட்டமிட்டு திருட முயற்சி: சிசிடிவி காட்சியில் சிக்கிய இளைஞர்