கடந்த 14ஆம் தேதி சென்னையில் துக்ளக் வார இதழின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்தும் முரசொலி இதழ் பற்றியும் அவதூறாகப் பேசினார் என்றும் தகவல்கள் வெளியாகின.
நடிகர் ரஜினிகாந்தின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுக்க பெரியார் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடிகர் ரஜினிகாந்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சேலத்தில் பெரியார் திராவிடர் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் கலாசார இயக்கம் , இந்திய புரட்சிகர கட்சி, தமிழ் புலிகள் உள்ளிட்ட அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் சேலம் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ' நடக்காத ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதுபோன்ற செய்தியை ஏற்கெனவே வெளியிட்டதால் துக்ளக் வார இதழ் மன்னிப்பு செய்தியையும் வெளியிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தது.
ஆனால், மீண்டும் அதை மேடையில் பேசி, நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மத்தியில் ஒரு தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். எனவே நடிகர் ரஜினிகாந்த் இது தொடர்பாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையென்றால் தமிழ்நாடு முழுக்கப் பெரியார் கொள்கைகளை பின்பற்றும் அரசியல் இயக்கத்தினர் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெரியார் குறித்த பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்: திருமாவளவன்