சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட அனைத்து மோட்டார் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, அனைத்து மோட்டார் தொழிலாளர்களுக்கும் மாதம்தோறும் ரூபாய் 7500 நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும், நாடு முழுவதுமுள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் , உடனடியாக கரோனா நிவாரணத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் தியாகராஜன், " இந்த தடை காலத்தில் மோட்டார் வாகன தொழிலாளர்கள் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாகி உள்ளனர்.அவர்கள் வைத்திருக்கும் வாகனங்களுக்கு சாலை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே கரோனா காலத்தில் ஓடாத வாகனங்களுக்கு சாலை வரி வசூலிப்பதை மத்திய மாநில அரசுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதா மாதம் ரூபாய் 7500 நிவாரண உதவி வழங்க வேண்டும். தடை காலத்திலும் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் .கரோனா காலம் முடியும்வரை எப் சி, இன்சூரன்ஸ் , பர்மிட், இஎம்ஐ ஆகியவற்றை நிறுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அளவில் அனைத்து மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
எங்களது கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செவிமடுத்து உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.