கள்ளக்குறிச்சி: நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி. இவர் தனது கணவருடன் உலகியநல்லூர்யிலுள்ள சகோதரர் சிவா வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை (அக்.24) சென்றுள்ளார். விடுமுறை நாள் என்பதால் சிவரஞ்சனி, அவரது கணவர் மற்றும் அண்ணா சிவாவின் குடும்பத்தினருடன் கல்வராயன் மலை தொடர்ச்சியில் ஆத்தூர் முட்டல் பகுதியிலுள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா பயணிகளுடன் இவர்களும் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்துள்ளனர்.
சிவரஞ்சனி தனது அண்ணன் குழந்தை சுஜியை எடுத்துக் கொண்டு கரையின் எதிர்ப்புறத்திற்கு சென்று விளையாட்டு காட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிவரஞ்சனி, குழந்தை சுஜி இருவரும் சிக்கிக் கொண்டனர்.
பதைபதைக்கும் சம்பவம்
இதனைக் கண்ட சிவரஞ்சனியின் அண்ணன் சிவா, இளைஞர்கள் அப்துல்ரகுமான், லட்சுமணன் ஆகிய மூவரும் வேட்டி, துப்பட்டா கொண்டு வெள்ளத்தில் சிக்கிய இருவரையும் பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் இளைஞர்கள் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்ததில் இருவரும் 100 மீட்டருக்கு அடித்து செல்லப்பட்டு பின் நீந்தி கரை சேர்ந்தனர்.
இந்த சம்பவத்தை சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ வைரலாகி இளைஞர்களை பொதுமக்கள், காவல்துறையினர் என அனைவரும் பாராட்டினர்.
முதலமைச்சர் பாராட்டு
முதலமைச்சர் ஸ்டாலினும் தன் ட்விட்டர் பக்கத்தில், "தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது. அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த இளைஞர்களின் தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது" என நெகிழ்ந்து பாரட்டினார்.
பேராபத்திலிருந்து மீண்டு வந்த பெண் சிவரஞ்சனி தன் உயிரைக் காப்பாற்றி, பத்திரமாக மீட்ட இளைஞர்கள் அப்துல்ரகுமான், லட்சுமணனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தாய், குழந்தையை மீட்ட இளைஞர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!