சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள மாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் கொடும் செயலில் ஈடுபட்ட நபர்களை காவல் துறை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரின் பெற்றோரையும் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் வாசுகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்துள்ளது என்பதற்கு ஓமலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமே உதாரணம். இந்தப் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தும், இதுவரை அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மேலும் வேதனையளிக்கிறது .
இரண்டாம் வகுப்பு பயிலும் இந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. குற்றவாளிகளை உடனே பிடித்து கைதுசெய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால், அவரிடம் ஆண் காவலர்கள் விசாரணை நடத்தக் கூடாது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் நேற்றிரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியையும் அவரின் பெற்றோரையும் ஆண் காவலர்கள் மிரட்டிச் சென்றுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கிறோம் . இதுபோன்ற சம்பவம் இனி இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாத வகையில் அரசு நடவடிக்கையை வலிமைப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நிவாரண உதவி வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற மகன் கைது!