Salem Cylinder Blast: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! - சேலம் செய்திகள்
சேலம் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் காயமடைந்த நபர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சையை புறக்கணித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சேலம்: கருங்கல்பட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஏழு வீடுகள் சிலிண்டர் வெடித்த விபத்தில் தரைமட்டமாகின. மேலும் 4க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில், 12 நபர்கள் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் தடயவியல் கைரேகை நிபுணர் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கட்டடங்களின் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளதால், வீடுகளில் குடியிருப்புவாசிகள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தங்குவதற்கு வீடில்லை, உடைமைகளுக்கு பாதுகாப்பில்லை
இதனால் தங்களது உடைமைகள், பொருள்களை மீட்டு தரக்கோரி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், சிகிச்சையை புறக்கணித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இவர்கள், தங்குவதற்கு இடமில்லை என்றும், மழையின் காரணமாக வீட்டில் பீரோவில் உள்ள ஆவணங்கள், நகைகள் உள்ளிட்ட உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அதனை மீட்டுத்தரக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இடிபாடுகளை விரைவாக அப்புறப்படுத்தவும் வலியுறுத்தினர். இந்தப் போராட்டம் குறித்து தகவலறிந்த கோட்டாட்சியர் விஷ்ணுவர்தனி, காயமடைந்தவர்களை சந்தித்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கலைந்து சென்றனர். சேலம் சிலிண்டர் வெடிப்பு மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவை: ரயில்மோதி உயிரிழந்த யானை கருவுற்றிருந்தது உடற்கூராய்வில் கண்டுபிடிப்பு