சேலம் ஐந்து ரோடு அருகே அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அதிமுக கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கலந்துகொண்டு தேர்தல் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
தொடர்ந்து அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் இரட்டை இலை வெற்றி பெற்றால் அது மோடிக்கு கிடைத்த வெற்றியைப் போன்றது ஆகும். அதிமுக பாஜக இடையே கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். ஆனால் தற்போது தமிழ்நாடு முதலமைச்சரின் அனைத்து கோரிக்கைகளுக்கும் மோடி உத்தரவாதம் அளித்துள்ளார். இதன்காரணமாக அனைத்து கருத்து வேறுபாடுகளும் மறைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என்றார்.
திருப்பரங்குன்றம் வேட்பாளர் போஸ் வெற்றி செல்லாது எனவும், அதில் ஜெயலலிதா கையொப்பம் போலியானது நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 'அது முற்றிலும் பொய் எனவும் அந்த வழக்கு இன்னும் நிலுவையிலேயே உள்ளது. மேலும் பொள்ளாட்சி விவகாரத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. பொள்ளாட்சி விவகாரத்தால் அதிமுகவின் வெற்றிக்கு எந்த பின்னடைவும் இல்லை' என்று கூறினார்.