சேலம்: கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப்பகுதியில் பெய்த தென்மேற்குப்பருவமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இதனை அடுத்து அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த ஒன்பது நாட்களுக்குப் பிறகு அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது.
இதனால் தங்கமாபுரி பட்டினம், சின்னக்காவூர், சேலம் கேம்ப் பகுதிகளில் காவிரி ஆற்றில், பாறைகள் இடையை ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய நீரில் கட்லா, ரோகு , கெளுத்தி , கெண்டை , ஜிலேபி, அரஞ்சான் உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் உள்ளன. இதனை சாதகமாக்கிக்கொண்ட சமூக விரோதிகள் தேங்கிய நீரில் பாறைகளை உடைக்க உபயோகிக்கும் நாட்டுவெடிகுண்டுவை வீசி வெடிக்க வைத்து, மீன்களைப்பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் நாட்டுவெடிகுண்டுவை வீசி மீன் பிடிக்கும் கும்பல் பெரிய மீன்களை மட்டும் எடுத்துக்கொண்டு சிறிய மீன்களை தண்ணீரில் விட்டுச் செல்கின்றனர். இதனால் கரையின் இருபுறங்களிலும் மீன்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, நாட்டுவெடிகுண்டுவை விநியோகம் செய்யும் நபர்கள் மீதும், நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிக்கும் சமூக விரோதிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:Watch Video: செஸ் விளையாட்டின் பிரதிபலிப்பாய் கலைஞர்களின் அற்புத நடனம்