சேலம்: சேது சமுத்திரத் திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு அப்போதைய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் காரணமாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையிலேயே கைவிடப்பட்டது.
இதனால், கடந்த 15ஆண்டுகளாக சேது சமுத்திரத் திட்டத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் ஒன்றிய அரசு உடனடியாக பல ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளுவர் மாவட்டம், அம்மையார் குப்பம் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் தென்னிந்தியா முழுவதும் சுமார் 4000 கி.மீ. இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் 29ஆம் தேதி சஞ்சீவியின் இருசக்கர வாகன பயணத்தை திமுகவின் செய்தி தொடர்புத்துறை செயலாளர்.டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு சஞ்சீவி சென்னையில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் சென்று அங்கிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொல்லம்
கொச்சின், திருச்சூர், பாலக்காடு வழியாக கோவை வந்து சேர்ந்தார்.
அதன் பிறகு அங்கிருந்து ஈரோடு வழியாக இன்று(பிப்.10) சேலம் வந்தடைந்தார். இந்தப் பயணம் குறித்து சேலத்தில் சஞ்சீவி அளித்த பேட்டியில், 'எனது சொந்த ஊர், திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் எனக்கு திருமணம் ஆகி பூங்கொடி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சொந்தமாக சிறிய உணவகம் வைத்து நடத்தி வருகின்றேன். சிறு வயது முதலே திமுகவின் தீவிரமான தொண்டராக நான் இருக்கிறேன். ஏற்கெனவே கலைஞர் கருணாநிதி சாதனைகள் குறித்து இரண்டு முறை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளேன்.
அதன்பிறகு தற்பொழுது இந்த சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்த இருசக்கர வாகன பயணத்தை நான் மேற்கொண்டு வருகின்றேன். இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவிலும் மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பை கண்டு நானே வியந்து, திகைத்து போய்விட்டேன்' என்றார்.
மேலும், 'எதிர்வரும் 20 நாட்களுக்குள் எனது பயணத்தை பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, நெல்லூர் வழியாக சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நிறைவு செய்ய உள்ளேன். மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அந்தத் திட்டத்தால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதுமே பல ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:அமைச்சர் காரில் கெத்தாக வலம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக எம்எல்ஏ!