சேலம்: தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மதுபானக்கடைகள் மூடப்பட்டன.
சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படாததால், மதுபானக்கடைகள் மூடப்பட்டன. இதனிடையே கர்நாடகம் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் மதுபானங்களை கடத்தி வந்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.
அவ்வாறு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்களை அவ்வப்போது காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.
வனப்பகுதியில் சோதனை:
அதேபோல் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகள், வீடுகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி மற்றும் கல்வராயன் ஆகிய வனச் சரகங்களில் வனத்துறையினர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதைத் தடுக்க கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
4 மாதத்தில் அழிக்கப்பட்ட சாராயம்:
இதில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் 7 ஆயிரத்து 241 லிட்டர் சாராயம், 48 ஊறல்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து சேலம் வனப்பகுதிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகளை, வனத்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'அடக்க முடியாத யானை திமுக' - எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் பதிலடி!