சேலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது தொடர்பாக சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் 280 பேருக்கு கரோனா பாதிப்பு இன்று (செப்டம்பர் 16) உறுதியானது.
சேலம் மாநகராட்சி பகுதியில் 196 பேரும், எடப்பாடி, காடையம்பட்டி, மேச்சேரி, தாரமங்கலத்தில் தலா இருவர், கொங்கணாபுரம், நங்கவள்ளி, பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம், தலைவாசல், கெங்கவல்லியில் தலா ஒருவர், ஓமலூர் 9, சங்ககிரி 5, வீரபாண்டி 7, ஆத்தூர் 4, அயோத்தியாப்பட்டணம் 10, பனமரத்துப்பட்டி 8, வாழப்பாடியில் 6 பேர் என மாவட்டத்தில் 275 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு பேருக்கும், அண்டை மாநிலமான கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இன்று (செப்டம்பர் 15) சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 5 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஆண்கள் 18 பேரும், பெண்கள் 9 பேரும் என மொத்தம் 27 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 341 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 12 ஆயிரத்து 876 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இரண்டாயிரத்து 220 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 245 பேர் கரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.